Wednesday 21 May 2014

தினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி 23



எந்த ஒரு மந்திரத்தையும் நடக்கும்போதோ,பயணிக்கும் போதோ ஜபிக்கவே கூடாது;மந்திரங்களில் இல்லறத்தார் ஜபிக்க வேண்டிய மந்திரங்கள்,துறவறத்தார் ஜபிக்க வேண்டிய மந்திரங்கள் என்று ஏராளமான உட்பிரிவுகள் இருக்கின்றன;
நாம் ஜபிக்கும் மந்திரமானது நமக்கு பலன் தர வேண்டும் எனில்,அதை நமது வீட்டு பூஜையறையில் மஞ்சள் துண்டு விரித்து அதன் மீது அமர்ந்து,கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்க வேண்டும்;வேறு எந்த விதத்திலும் ஜபிக்கக் கூடாது;அப்படி அமர்ந்து ஜபிக்கும்போது,நமது உடல் பகுதி மஞ்சள் துண்டைத் தாண்டி வெளியே நீட்டிக் கொண்டு(தரையில் படுமாறு) இருக்கக்கூடாது;அப்படி இருந்தால்,நாம் ஜபிக்கும் ஜபத்திற்கான பலன் நமது சூட்சும உடலில் சேகரம் ஆகாமல் பூமிக்குள் போய்விடும்;

நாம் ஜபிக்கும் மந்திரத்தை முறைப்படி,குருவின் தீட்சை பெற்றப்பின்பே ஜபிக்க வேண்டும்;மனதைத் திற(ட)ப்படுத்துவது எதுவோ அதுவே மந்திரம் எனப்படும்.மந்திரம் என்ற வார்த்தைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கின்றன.வீட்டிற்கும் மந்திரம் என்ற அர்த்தம் உண்டு;
ஒருபோதும் நாம் இன்னொரு மனிதனை தாண்டிச் செல்லக் கூடாது;மிதிக்கக் கூடாது;தெரியாமல் நமது கால் அடுத்தவர் மீது பட்டாலும்,உடனே அவர் உடலைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்;இதன் மூலமாக,நாம் அவரது ஆத்மாவிடமும்,அந்த ஆத்மாவுக்குள் சூட்சும ஒளியாக இருந்து இயக்கும் சிவசக்தியிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்றே பொருள்;

இன்னொருவர் பயன்படுத்திய ஆடை,செருப்பு போன்றவைகளைப்பயன்படுத்தக் கூடாது;

குமரி,நெல்லை மாவட்டங்களில் சாப்பிட்டதும்,அந்தத் தட்டிலேயே கை கழுவும் பழக்கம் கிடையாது;ஏனெனில்,அன்னத்தை சுமக்கும் தட்டும் மஹாலக்ஷ்மியின் அம்சமாக இருப்பதால்,அதிலேயே கை கழுவினால் மஹாலஷ்மியை அவமதிப்பதாக அர்த்தம்;முடிந்தால் நாமும் இந்தப்பழக்கத்தைப் பின்பற்றலாமே!
தென்மாவட்டங்களில் அண்டைவீட்டினர்,தனது பக்கத்துவீட்டினரிடம் ஒரு மளிகைப்  பொருளைக் கேட்கும்போது,அது இல்லையெனில்,அந்த பக்கத்து வீட்டினர் இல்லை என்று கூறமாட்டார்கள்;நிறைஞ்சிருக்கு என்று கூறுவார்கள்;என்ன ஒரு உயர்வான சிந்தனை!

அடிக்கடி இல்லை;முடியாது;தெரியாது;பிரச்னை என்று நாம் பேசினால் அது நமது ஆழ்மனதினுள் புகுந்து வேலை செய்யத் துவங்கும்;அதனால் தான் ஒருபோதும் கெட்ட சொல் சொல்லாமலிருக்க நமது முன்னோர்கள் வலியுறுத்தி வந்தனர்;

புதிய கோவில்கள் கட்டுவதை விடவும்,பழைமையான ஆலயங்களை புனர்நிர்மாணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும்;ஒருவருக்கு சிவாலயம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உண்டாவது நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் அரிதிலும் அரிதானதாகும்;சிவமஹாபுராணம் வாசிக்கும் எண்ணம் வருவதும் அரிதிலும் அரிதாகும்;சிவாலயத்தின் உழவாரப்பணியைச் செய்தாலே நமது பலகர்மவினைகள் நீங்கும்;தோஷங்களைச் சரி செய்யவே துல்லியமான பரிகாரத்தை நாமே செய்ய வேண்டும்;பரிகாரம் என்பது நமது சிரமம் நிறைந்த வாழ்க்கையைச் சீரமைக்க உருவாக்கப்பட்டவை;(சிவாலயத்தினுள் இருக்கும் குப்பையை அள்ளிக்கொண்டு வந்து கோவிலுக்கு வெளியே வெகுதூரத்தில் கொட்டுவதும் ஒருவிதத்தில் புண்ணியத்தைத் தரும்; பிரதோஷ நேரத்தில் சிவமந்திரங்கள் அடங்கிய புத்தகத்தை இலவசமாக விநியோகம் செய்வதும் ஒருவித புண்ணியமே! வளர்பிறை அஷ்டமி பற்றிய விழிப்புணர்ச்சியை கோவிலுக்கு வருபவர்களிடம் உருவாக்குவதும் ஒருவித புண்ணியச் செயலே!!)

ஒவ்வொரு குடும்பத்திலும் குடும்ப நூலகம் ஒன்றை அமைப்பது அவசியம்;சில பத்தாண்டுகள் முன்புவரையிலும்,ஒவ்வொரு குடும்பத்திலும் ஆன்மீக நூலகம் இருந்திருக்கிறது;அதில் பழமையான ஆன்மீக,ஜோதிட,மருத்துவ நூல்கள் இருந்திருக்கின்றன;இந்த நூல்கள்,பரம்பரையாக அந்தக் குடும்பத்தில் ஒருவரை ஜோதிடராகவும்,ஒருவரை வைத்தியராகவும் ஆக்கியிருக்கின்றன;(இந்த நூற்றாண்டுக்கு முன்பு,ஒவ்வொரு குடும்பத்திலும் ஏராளமான ஓலைச்சுவடிகள் இருந்துள்ளன)தற்காலத்தில் அப்படிப்பட்ட புராதனமான நூல்கள் அனைத்துமே பழைய புத்தகக்கடைகளில் புதைந்து இருக்கின்றன;இதுபற்றிய அடிப்படை ஞானம் கூட நம்மில் பலருக்கு இப்போது இல்லை;

அவதானம் என்றால்,கவனக் குவிப்பு என்று அர்த்தம்;த்ரி அவதானம் என்றால்,ஒரே நேரத்தில் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்துதல் என்று அர்த்தம்;அதாவது நீங்கள் இந்த கட்டுரை வாசிப்பது ஒரு கவனக் குவிப்பு;அவ்வாறு வாசித்துக் கொண்டே உங்கள் செல்போனில் ஒரு எஸ்.எம்.எஸ்ஸை டைப் அடிப்பது இரண்டாவது கவனக் குவிப்பு;அவ்வாறு செய்து கொண்டே பக்கத்துவிட்டில்/அடுத்த அறையில் இருக்கும் டிவி சப்தத்தைக் கவனிப்பது மூன்றாவது கவனக் குவிப்பு;இப்படி ஒரே நேரத்தில் முன்று விஷயங்களில் கவனம் செலுத்துதல் த்ரி அவதானம் என்று பெயர்;

அஷ்ட அவதானம் என்றால் ஒரே நேரத்தில் எட்டு விஷயங்களில் கவனம் செலுத்துதல் என்று பெயர்;போராளி என்ற திரைப்படத்தில் இதை காட்சிப் படுத்தியுள்ளனர்;தச அவதானம் என்றால் ஒரே நேரத்தில் பத்து விஷயங்களில் கவனம் செலுத்துதல் என்று பெயர்;இதே போல சோடேச அவதானம் என்றும்,சத அவதானம் என்றும் நமது முன்னோர்களிடம் மனத் திறமைகள் இருந்திருக்கின்றன;சோடேச அவதானம் என்றால் ஒரே நேரத்தில் 16 விஷயங்களில் கவனம் செலுத்துதல்;சத அவதானம் என்றால் ஒரே நேரத்தில் 100 விஷயங்களில் கவனம் செலுத்துதல்;நமது தமிழ்நாட்டில் 1950 வரையிலும் சத அவதானிகளும்,சகஸ்ர அவதானிகளும் வாழ்ந்திருக்கிறார்கள்;(சகஸ்ர என்றால் ஆயிரம் என்று பெயர்)

அசைவம் சாப்பிடுவதையும்,மது அருந்துவதையும் நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு,மஞ்சள் நிற பட்டு ஆடையை வாரம் ஒருமுறை அணிபவர்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து படிப்படியாக மீண்டுவிடுவார்கள்;

No comments:

Post a Comment